தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் அனந்தகுமரன்,   சிவசுப்பிரமணியன்  ஆகியோர் மதுரை வில்லூர் அருகே சித்தூரில் மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது கண்மாய் கரையில் பாதி புதைந்த நிலையில்  கி.பி13ம் நூற்றாண்டை சேர்ந்த   அய்யனார் சிற்பம் மற்றும் கி.பி 16ம் நூற்றாண்டு நடுகல் கண்டறியப்பட்டது.






இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் "இப்பகுதி பாண்டியர் ஆட்சி காலத்தில்  வீரநாராயண வளநாடு எல்லைக்குட்பட்ட  பொற்பாத தேவி சதுர் மங்கலம் என்றும், இங்கு  பழமையான சிவன் கோயிலில் சித்தர்கள் தவம் செய்ததாகவும் சித்தர் பெயரில் சித்தூர் பெயர் மருவியதாக சொல்லப்படுகிறது.  இவ்வூரின் கண்மாய் மடைப்பகுதி அருகே 3அடி உயரமும் 1 ½ அடி அகலமும் கொண்டு பாதி புதைந்த நிலையில் காணப்படுகிறது . தலைப்பகுதியில் அடர்த்தியான ஜடாபாரம், இரண்டு காதுகளிலும் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிகலன்களுடன் மார்பில் முப்புரி நூலுடன் இச்சிற்பம் அமைந்துள்ளது.



பட்டையான உதரபந்தம்  மார்பையும் வயிற்றுப்பகுதியும் பிரிக்கிறது. இடுப்பில் கச்சுடன் சுகாசன கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தி, வலது  காலை  தொங்கவிட்டு, வலது கரத்தில் கடக முத்திரை கொண்ட  செண்டை ஆயுதம் சிதைந்த நிலையில்,  இடது கையை தனது தொடையின் மீது வைத்து அழகாக காட்சி தருகிறார். இதன் காலம் கி.பி 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை. 



நடுகல் 

 

சங்ககால முதற்கொண்டு  போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நடுகல் வைத்து வழிபடும் முறை இருந்தது. சித்தூரில் கண்டறியப்பட்ட நடுகல் 4 . அடி உயரமும் 1 ½ அடி அகலமும் கொண்டுள்ளது. வீரனின் இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாள்,  வலது கையில் நீண்ட பட்டகத்தியும் இடது கையில் இடுப்பில் செருகப்பட்ட வாள் பிடித்தவாறு காட்சி தருகிறான்.  நீண்ட தலைப்பாகை கொண்டு காது, மார்பில் அணிகலன் அணிந்து, கை மற்றும்  காலில் வளையல் அணிந்து நின்றவாறு வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை அமைப்பை கொண்டு இதன் காலம் கி.பி 16ம் நூற்றாண்டு சேர்ந்தவையாகும்" என்றார்.