கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவிகள் பாதுகாப்பிற்காக ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தை, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை மாநகர காவல் துறை சார்பில் குற்றச் செயல்களை குறைக்கவும், அது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் துறைக்கும், பொது மக்களுக்குமான உறவை பலப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் நடைபெற்று வருகிறது. அதேபோல குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும், வாசிப்பு தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் வீதிதோறும் நூலகம் உள்ளிட்ட திட்டங்களை மாநகர காவல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் முதல் முறையாக கல்லூரியில் பயிலும் மாணவிகள் நலன் கருதி ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்படுவார். அவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு அவர்கள் கொடுக்கும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக மற்றவர்களிடம் சொல்ல தயக்கம்காட்டி வரும் நிலையை தவிர்த்து, காவல் துறையினரிடம் தெரியப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஏதேனும் குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி அவரிடம் முறையிடலாம் எனவும், அவர் பரிவுடன் விவரங்களை கேட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகரின் உள்ள 60 கல்லூரி நிர்வாகிகள் மற்றும் 37 பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
OTT Release this week: இந்த வாரமும் ஓடிடி.,யில் படையெடுக்கும் படங்கள்... முழு விபரம் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்