நீலகிரி நாடாளுன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா இன்று உதகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ”பிரதமர் மோடி நாட்டில் கோயில்களை விட அதிகமாக கழிப்பறைகள் கட்டி உள்ளதாக பெருமையாக கூறுகிறார். ஆனால் கட்டபட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்த போதிய தண்ணீர் இல்லை. மக்களிடையே கழிப்பறையை பயன்டுத்துவது குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் 80 சதவீதம் கழிப்பறைகள் பயனற்று இருக்கிறது. 


நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பணிகள் குறிப்பிட்ட கால அளவு மற்றும் தொகையில் ஒரிரு வேலைகளைத் தவிர, முழுமையாக பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. டேன் டீ நிறுவனத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதியில் வனத்தை ஒட்டிய பபர் ஜோன் மக்களுக்கு ஆபத்தாக இருந்தது. அது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செக்சன் 17 விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் பேசி விரைவில் தீர்வு காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு தரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். புதிய சாலைகள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.




செய்தியாளர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஆ.ராசாவிடம் சிபிஐ புதிதாக 5.53 கோடி சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து கேட்ட போது, ”ஏற்கனவே அமலாக்க துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் 2ஜி வழக்கின் போதே அந்த சொத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டனர். அது என் சொத்து இல்லை. வேறொருவர் உடைய சொத்து எனவும், ராசா சொத்து இல்லை எனவும் தலைமை விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார். வேண்டுமென்றே தேர்தலுக்காக ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடர்ந்துள்ளனர். மத்திய அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சித்து வருவதால் வழக்கு தொடர்ந்துள்ளனர். 2 ஜி வழக்கையே பார்த்து விட்டேன். இதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மத்திய புலனாய்வு துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015 ஆகஸ்ட் 18 ம் தேதி அன்று சிபிஐ வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தது. அப்போது அவர்கள் ரூ. 27.97 கோடிக்கு அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும், அதில் ஆ.ராசா ரூ.5.53 கோடி சொத்து வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண