கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் கிளை, கோவை காந்திபுரம் நூறடி சாலையில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 27 ம் தேதியன்று இரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் இன்று காலையில் வழக்கம் போல கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்த போது, 200 சவரண் தங்கநகைகள், வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கடையின் ஏசி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்த பகுதி வழியாக உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


மேலும் கடைக்குள் உள்ளே நுழைந்த நபர் கண்காணிப்பு கேமரா முன்பு சட்டையில் முகத்தை மறைத்த மாதிரி சென்றதும், அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததும் தெரியவந்தது. கோவை நகரின் முக்கிய பகுதியில் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள், அண்மையில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டவர்கள் உள்ளிட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் கடையின் பின்பக்கம் வழியாக வெளியேறிய கொள்ளையன் அப்பகுதியில் சாவகாசமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் நகைகள் கொண்ட பையுடன் எவ்வித பதற்றமும் இன்றி சாலையில் சாவகாசமாக நடந்து செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது. மற்றொரு சிசிடிவி கட்சியில் சுமார் 4 மணி அளவில் கொள்ளையன் ஆட்டோவில் பயணம் செய்யும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. இதனைதொடர்ந்து கொள்ளையன் ஏறிச்சென்ற ஆட்டோ ஓட்டுநரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ஆட்டோவில் இருந்து பேருந்தில் ஏறி தப்பி சென்றதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ள நிலையில், பொள்ளாச்சி பாலக்காடு மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறிய கொள்ளையன் பாதி வழியிலேயே இறங்கினாரா அல்லது வேறு எங்கேனும் சென்றாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.


இந்த சூழலில் தப்பித்து சென்ற கொள்ளையன் அணிந்திருந்த சட்டையை கடையில் விட்டுச் சென்றதால் அவருடைய சட்டையில் அவர் பயணித்து வந்த அரசு பேருந்து டிக்கெட் இருந்தது. அதன் அடிப்படையிலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து கொள்ளையன் வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அங்கு விசாரணை நடத்தியபோது தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சேர்ந்த விஜயகுமார் வயது 25 என தெரியவந்தது. இவருக்கு வெவ்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்கு உள்ளது. இதையடுத்து தனிப்படை தர்மபுரி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளை காவல் துறையினர் மீட்டனர். ஆனைமலை பகுதியில் இருந்த விஜயகுமார் காவல் துறையினர் வருவதை பார்த்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. தப்பித்து ஓடிய விஜயகுமாரை பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.