கோவை மாவட்டம் சூலூர் அருகே அத்தப்பகவுண்டன்புதுர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கிராமத்தில் நீர்வழிப்பாதை இல்லாததால் தண்ணீர் தேங்காத ஒரு குட்டை, குப்பைகள் கொட்டப்பட்டதால் குப்பை மேடாக மாறியுள்ளது. அதனால் காசு மாற்று அடைந்து தூர்நாற்றம் வீசியதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமென அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பலர் இணைந்து பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன், குட்டையில் இருந்த குப்பைகளை வெளியேற்றியுள்ளனர்.


பின்னர் அந்த இடத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்ற வேண்டுமென தீர்மானித்த தன்னார்வலர்கள், மரப்பூங்காவை உருவாக்க முடிவு செய்தனர். இதன்படி அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிழல் மரங்கள், மூலிகை மரங்கள், பழ மரங்கள் உள்ளிட்டவற்றை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதனால் குப்பை மேடு பசுமை வனமானது.




மரப்பூங்கா உருவாக்கும் முயற்சி வெற்றி அடைந்ததால் உற்சாகம் அடைந்த தன்னார்வலர்கள், அப்பகுதியில் மேலும் 3 மரப்பூங்காக்களை உருவாக்கினர். ஓடைப்பகுதி மற்றும் மயான பகுதிகளில் மொத்தம் 6 ஆயிரம் மரங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதனிடையே மரம் வளர்ப்பில் மக்களது பங்களிப்பை உருவாக்கும் வகையில் குழந்தைகள் பிறக்கும் போதும், குடும்ப உறுப்பினர்கள் இறக்கும் போதும் அவர்களது நினைவாக ஒரு மரம் நடுவது என்ற ஒரு புதிய முயற்சியை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக அதிக அளவிலான மரங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மரங்கள் பராமரிக்கப்பட்டு வருவதால், பல்லுயிர் சூழல் மேம்பட்டதோடு, பசுமையான சூழல் உருவானது.




இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலரும், இயற்கை விவசாயியுமான தங்கவேலு கூறும் போது, “நீர்வழிப்பாதை இல்லாத குட்டை குப்பை மேடாக இருந்தது. அங்கு கடந்த 2014 ம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் இணைந்து குப்பைகளை வெளியேற்றி, மரங்கள் நடவு செய்ய முடிவு செய்தோம். அதன்படி பல தன்னார்வலர்களின் உதவியுடன் பல வகையான மரங்கள் நடவு செய்து செய்து, வனத்தை உருவாக்கினோம். மரங்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய இருகூர் பேரூராட்சி உதவியுடன் ஆழ்துளை கிணறு அமைத்து சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஓடை மற்றும் மயான பகுதிகளிலும் மரங்கள் நட்டு மரப்பூங்காக்களை உருவாக்கியுள்ளோம். மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம்.




மரங்களால் நல்ல காற்று கிடைப்பதுடன், வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. பறவைகள் கூடு கட்டி வாழ உகந்த சூழல் ஏற்படுத்தினோம். பறவைகளின் உணவு தேவைக்கு பழ மரங்கள் நட்டதால், பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. மரங்கள் காற்று மாசை குறைக்கவும், நோயில் இருந்து மக்களை காக்கவும் பெருமளவு உதவி செய்கின்றன. மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம் என மரங்களை நட்டு வருகிறோம். குழந்தைகள் பிறந்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரங்களை வைக்கிறார்கள்.


அதேபோல குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் அவர்களது நினைவாக மரம் நடப்படுகிறது. திருமண நாள் கொண்டாட்டத்தின் போதும் மரங்கள் வைக்கப்படுகிறது. இப்படி 4 மரப்பூங்காக்களை உருவாக்கிள்ளோம். அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ மரங்களை தொடர்ந்து நட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.




இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த துரைசாமி கூறுகையில், “எனது அப்பாவின் நினைவாக மரம் வைத்து பராமரித்து வருகிறோம். ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் அந்த மரத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறோம். அந்த மரம் எனது அப்பா இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைக்க வைக்கிறது” எனத் தெரிவித்தார்.