கோவை மாவட்டம் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


வால்பாறை என்றதும் வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளும், பனி மூடிய மலைகளும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், குளிருக்கு இதமான தேநீரும் கண் முன்னே காட்சிகளாக விரிக்கும். இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வால்பாறை, சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக இருந்து வருகிறது.


கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை ஏழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தேயிலை தொழில் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வால்பாறையை ஒட்டியுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், புலி, யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையை ரசிக்கவும், ஆங்காங்கே தென்படும் விலங்குகளை காணவும், நாள்தோறும் வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.




இதனிடையே வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வனவிலங்குகளை துன்புறுத்துவதாகவும், கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இது தொடர்பான புகார்களில் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வால்பாறை சாலையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மாலை ஆறு மணிக்கு மேல் ஆழியார் சோதனை சாவடி வழியாக வால்பாறை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஆழியார் சோதனை சாவடியை தாண்டி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப்பகுதியில் செல்லக்கூடாது என விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க : 'யானைகளின் சூப்பர் ஸ்டார் செங்களூர் ரங்கநாதன்’ ; ஆசியாவின் மிக உயரமான யானையின் உருக்கமான கதை!