காட்டு யானைகளை பிடித்து வளர்ப்பு யானைகளாக மாற்றி, மனிதர்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவது என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. மன்னர்கள் காலத்தில் போர் களத்தில் சண்டையிட்ட வளர்ப்பு யானைகள், தற்போது கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளுடன் சண்டையிட்டு விரட்டவும், பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் அந்த காலம் முதல் இந்த காலம் வரை வளர்ப்பு யானைகளின் கோவில் விழாக்களில் முக்கிய அங்கமாக இருப்பது மட்டும் மாறவில்லை. அப்படி நூறாண்டுகளுக்கு முன்பு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு கோவிலில் வளர்ந்த ஒரு யானை, ஆசியாவின் மிகப்பெரிய யானை என்ற பெருமையோடு இன்றளவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.  


செங்களூர் ரங்கநாதன் என்ற அந்த யானையின் பெயர் இன்றளவும் பிரபலம். ஏன் தெரியுமா? அந்த கால யானைகளின் சூப்பர் ஸ்டார் செங்களூர் ரங்கநாதன் என்பதே அதற்கு காரணம். திருச்சியில் இருந்து திருச்சூர் சென்று உலகின் கவனத்தை ஈர்த்த ஆசியாவின் மிக உயரமான யானையான செங்களூர் ரங்கநாதனின் பிரமாண்ட எலும்புக்கூடு, திருச்சூர் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. என்ன காரணம் தெரியுமா?


காவிரி ஆற்றங்கரையில் ரங்கநாதன்


திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கால கட்டத்தில் ஒரு குட்டி யானை வந்து சேர்கிறது. அந்த குட்டி யானைக்கு ரங்கநாதர் சாமியை குறிப்பிடும் வகையில், ரங்கநாதன் என பெயர் சூட்டப்பட்டது. தினமும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கோவிலுக்குள் எடுத்து வர ரங்கநாதனுக்கு பழக்கப்படுத்தப்பட்டது. இதன்படி காவிரி ஆற்றில் இருந்து ரங்கநாதன் எடுத்து வரும் கலச நீரில் தான் ரங்கநாத சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ரங்கநாதன் வளர வளர பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. அசாத்தியமான வகையில் உயரமாக ரங்கநாதன் வளர்ந்தது.  இதனால் கோயிலின் உள் வாயில்கள் வழியாகச் கோயிலுக்குள் ரங்கநாதனால் நுழைய முடியவில்லை. இருப்பினும் பகான்களின் வற்புறுத்தலால் சிரமப்பட்டு கோவிலுக்குள் சென்ற யானையின் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் ரங்கநாதனால் கோவிலுக்குள் நுழைய முடியாத உயரத்தையும், கம்பீரமான தோற்றத்தையும் அடைந்த போது, கோவில் நிர்வாகத்தினர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தனர்.




பல கட்ட யோசனைகளுக்கு பிறகு ரங்கநாதனை விற்பனை செய்து விடலாம் என கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. 1905ம் ஆண்டில் ஒரு ஆங்கில நாளிதழில் ‘யானை விற்பனைக்கு’ என விளம்பரம் அளிக்கப்பட்டது. இதனைப் பார்த்து திருச்சூரில் உள்ள செங்களூரை சேர்ந்த பரமேசுவரன் நம்பூதிரி என்பவர் 1,500 ரூபாய்க்கு ரங்கநாதனை விலைக்கு வாங்கினார்.


திருச்சூர் பூரத்தில் ரங்கநாதன்


செங்களூர் சென்ற ரங்கநாதனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டது. இதில் உடல் நலம் தேறிய ரங்கநாதனின் கம்பீரமான தோற்றத்துடன், உடல் பொலிவும் சேர்ந்தது. 1906ம் ஆண்டு நடந்த, திருச்சூர் ஆடிப்பூரம் திருவிழாவிற்கு ரங்கநாதனைக் அழைத்து வந்து நிறுத்தினார், பரமேசுவரன் நம்பூதிரி. அழகிய பரந்த நெற்றி, நிலத்தை தொடும் தும்பிக்கை, நீண்ட மினுங்கும் தந்தங்கள் அசாத்தியமான உயரம், கம்பீரமான தோற்றத்துடன் இருந்த ரங்கநாதனைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் 11 அடி 4 அங்குல உயரத்துடன் கம்பீரமாக இருந்த ரங்கநாதனின் முன்பு மற்ற யானைகள் எல்லாம் குழந்தைகள் போல தெரிந்தன. அதன் பிரமாண்ட உருவத்தை பார்த்த மக்கள் ரங்கநாதனை கொண்டாடினர். மக்களின் மனங்களை கவர்ந்த ரங்கநாதன் 1906 முதல் 1914 வரை ஆறாட்டுப்புழா பூரத்தின் முக்கிய உற்சவரைச் சுமந்து சென்ற ரங்கநாதனின் புகழ் எட்டுதிக்கும் பரவியது.


ரங்கநாதனை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பூரத்திற்கு வருகை தந்தனர். இதனால் யானைகளின் சூப்பர் ஸ்டாராக அக்காலத்தில் செங்களூர் ரங்கநாதன் வலம் வந்தது. இந்த சூழலில் 1914ஆம் ஆண்டு ஆறாட்டுப்புழா பூரத்தின் போது, கோவிந்தன் என்ற யானை தாக்கியதில் ரங்கநாதன் படுகாயமடைந்தது. தொடர் சிகிச்சை அளித்த போதும் ரங்கநாதன் 1917ம் ஆண்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


அருங்காட்சியகத்தில் ஆச்சரியப்படுத்தும் ரங்கநாதன்


ஆசியாவின் மிகப்பெரிய யானை என்ற பெருமையை பெற்ற ரங்கநாதனின் மரணம் குறித்து தகவல் அறிந்த, பிரிட்டிஷ் அதிகாரிகள் லண்டன் அருங்காட்சியகத்தில் அதன் எலும்புக்கூட்டை காட்சிக்கு வைக்க முடிவு செய்தனர். அதற்கேற்ப ராசாயணங்கள் தடவி புதைக்கப்பட்ட ரங்கநாதனின் உடல், ஆறு மாதங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. ஒரு நுண்ணிய எலும்பு கூட தவற விடாமல் ரங்கநாதனின் எலும்புக்கூடு கோர்க்கப்பட்டது. பிரமாண்ட எலும்புக்கூடை பார்த்த போது, மீண்டும் ரங்கநாதன் உயிர்பெற்று நிற்பது போல தெரிந்தது. இதனால் ரங்கநாதன் எங்களிடமே இருக்கட்டும் என கேட்டுக்கொண்டதால், லண்டன் கொண்டு செல்வது தவிர்க்கப்பட்டது. பின்னர் திருச்சூர் அருங்காட்சியகத்தில் 345 செ.மீ. (136 அங்குலம்) உயரமுடைய பிரமாண்டமான ரங்கநாதனின் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்பட்டது.


மறைந்து நூறாண்டுகள் கடந்த பிறகும் செங்களூர் ரங்கநாதன் தனது பிரமாண்ட தோற்றத்தினால் பார்வையாளர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.