கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் அனுவாவி அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில், மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட உலா வருவது வழக்கம். குறிப்பாக கோவிலுக்கு செல்லும் வழிப்பாதைகளிலும், படிக்கட்டிகளிலும் அடிக்கடி காட்டு யானைகள் தென்படுவது வழக்கம். இந்த நிலையில் இக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் எனப்படும் கம்பிவட ஊர்தி வசதி அமைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 420 மீட்டர் உயரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் நிறுவனத்தினர் கள ஆய்வு மேற்கொண்டு. சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள் எனவும், அதற்கான அறிக்கை பெற்றவுடன் ரோப் கார் வசதி அமைக்கும் பணி நடைபெறும் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், கோவை வனச்சரகர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டார். அதில் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் உள்ள பகுதி யானைகளின் முக்கியமான வழித்தடமாக உள்ளது எனவும், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் அனுமதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்திய வனச்சரகர், இதனை மீறி மனித யானை மோதல் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ரோப் கார் வசதி அமைக்க பணிகள் துவக்க சூழலியல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் ஏபிபி நாடுவிடம் கூறுகையில், “மலைப்பகுதியில் உள்ள அனுவாவி கோவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இக்கோவிலில் மக்கள் நடமாட்டமும் குறைவாக உள்ளது. இந்த கோவில் வழியாக யானைகள் அதிகளவில் கடந்து செல்கின்றன. இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் யானைகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பு உள்ள இடமாக உள்ளது.
இப்பகுதிக்கு வந்து பழக்கப்பட்ட யானைகள், வருவதை தடுக்க முடியாது. இந்த சூழலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் வசதி அமைத்தால், யானைகளின் வழித்தடம் அடைக்கப்படும். யானைகள் புதிய வழித்தடம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் மனித யானை மோதல்கள் அதிகரிக்கவும், உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற வசதிகள் செய்யப்பட்டால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேசமயத்தில், யானைகளால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகரிக்கும். காடு மற்றும் வனவிலங்குகளை பாதிக்கும் என்பதால், ரோப் கார் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.