கடந்த 19 ம் தேதி தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  அப்போது ”பன்முகத் திறனுடன் கூடிய தொழிற் சூழல், தொழில் முனைவோரின் உற்சாகம், தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், இனிய விருந்தோம்பல் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயம்புத்தூர் மாநகரம், நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம்பெறுவது மட்டுமன்றி விண்வெளி, எந்திரவியல், மெய்நிகர் தோற்றம், இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த கண்காட்சிகள் ஏற்படுத்தப்படும்” என தங்கம் தென்னரசு அறிவித்தார்.


இந்த நிலையில் நூலகம் அமைக்கப்படுவது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”நேற்றைய தினம் விவாதத்தின் போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வினாவிற்கு விளக்கம் சொல்லப்பட்டது. அப்போது பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார் எனத் தெரியவில்லை. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து விட்டு, அது எங்கே அமைய இருக்கிறது?, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?, எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள்?, எப்போது அந்த பணிகள் முடிவடையும் என அவர் கேள்வி கேட்டார்.


அது உடனடியாக செயலாகத்திற்கு வரும். ஏனென்றால் இந்த ஆட்சி சொன்னதை செய்யும். சொல்வதை தான் செய்யும். செய்வதை தான் சொல்லும். எப்படி மதுரையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு இருக்கிறதோ, அதேபோல சென்னையில் கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறு தழுவல் அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறதோ, இன்னும் சில தினங்களில் கலைஞர் நினைவகம் அமைய இருக்கிறதோ அப்படி சொன்னபடி இந்த ஆட்சி நடக்கும். ஆனால் ஒன்றை மட்டும் வானதி சீனிவாசனுக்கு தெரிவித்து கொள்ள விரும்புவது, மதுரையில் எய்ம்ஸ் அறிவித்தது போல இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அது திறக்கப்படும் தேதியையும் குறிப்பிடுகிறேன். 2026ம் ஆண்டு ஜனவரியில் நூலகம் திறப்படும். அதற்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.


ALSO READ | Jothimani: விஜய் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்! கலங்குகிறதா தமிழக காங்கிரஸ்! பேசு பொருளாகும் ஜோதிமணி பேச்சு!