கோவை மக்களவை தொகுதி
கோவை மக்களவை தொகுதியின் ஆரம்பம் முதல் இன்று வரை தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாக இருந்து வருகிறது. இத்தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. கோவை மாவட்டத்தில் வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள அதிமுக, கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டதும், வென்றதும் ஒரே முறை தான் என்பதில் இருந்தே அதனை புரிந்து கொள்ளலாம்.
1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1952 ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தி.அ. ராமலிங்கம் செட்டியார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.சுப்பராயனின் மகளான பார்வதி கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998 மற்றும் 1999 தேர்தல்களில் பாஜக சார்பில் சி.பி. ராதாகிருஷணன் வெற்றி பெற்றார். 2009 மற்றும் 2019 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றுள்ளார்.
2019 மற்றும் 2021 தேர்தல் முடிவுகள்
கோவை நாடாளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் 60 ஆயிரத்து 519 வாக்குகளும் பெற்றனர்.
2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் உள்ள ஆறு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. திமுக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. கோவை தெற்கு தொகுதியில் பாஜக வென்ற நிலையில், மீதமுள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
பி.ஆர். நடராஜன் வாக்குறுதிகள்
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வெளியூரில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், பெங்களூரு, சென்னை நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம், சோமனூர் பகுதியில் ஜவுளி பூங்கா அமைத்தல், உலகத்தரமான கிரிக்கெட் மைதானம் அமைத்தல், நகரப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தலித் மக்களை மீள்குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தேர்தலின் போது பி.ஆர். நடராஜன் அளித்து இருந்தார்.
செய்தவை என்ன?
நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர். நடராஜன் 5 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் 27 கேள்விகளை எழுப்பியுள்ளார்.. தொகுதி மேம்பாட்டு நிதியில் 106 பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். அதில் ரேசன் கடைகள், சமுதாய கூடம், நீர் தேக்க தொட்டிகள் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். மக்கள் எளிதாக அணுகும் நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்து வருகிறார். ஜி.எஸ்.டி வரி குறைப்பு, ரயில்வே திட்டங்களுக்காக நாடாளுமன்றத்தில் இவர் குரல் கொடுத்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து மருத்துவ உதவிகள், கல்வி கடன் ஆகியவைகளை பெற்று தந்துள்ளார். ஆனால் பி.ஆர். நடராஜன் தேர்தலின் போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
கோவை மக்களவை தொகுதி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், கட்சி விதிகளின்படி பி.ஆர்.நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.