புதிய இயக்கங்கள் அரசியல் களம் காண்பது குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி பேசியுள்ளது தற்போது பேசு பொருளாகி உள்ளது


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். செல்வப்பெருந்தகை அக்கட்சியின் தலைவராக பதவியேற்கும் விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. 


முன்னதாக அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் அமைந்திருந்த மேடையில் செல்வப்பெருந்தகை உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒவவொரு தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்புக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.


அப்போது கருர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். அப்போது அவர் பேசும் போது, ”தமிழக மண்ணில் காங்கிரஸ் தனக்குரிய தனித்துவமான இடத்தை பிடிக்கும். தமிழ்நாடு மிக நெருக்கடியான காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது. பாஜகவின் வெற்று வார்த்தைகளுக்கு நடுவே தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இருக்கிறது. இதுபோன்ற ஒரு தருணத்தில் அண்ணன் செல்வப்பெருந்தகை போன்ற ஆற்றல் மிக்க தலைவரை காங்கிரஸ் மேலிடம் பணியில் அமர்த்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.  


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி


மேலும் பேசிய அவர், ”புதிய இயக்கங்கள் தமிழக அரசியலில் களம் காண உள்ள நிலையில், பெருமளவில் இளைஞர்களையும், மகளிரையும் ஈர்க்க வேண்டிய கடமை தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு உண்டு. அதோடு பெண்களையும், இளைஞர்களையும் கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டும்” என மேடையிலேயே குரல் கொடுத்தார் ஜோதிமணி. இந்நிலையில், புதிய இயக்கங்கள் என அவர் குறிப்பிட்டது சமீபத்தில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள  தமிழக வெற்றிக் கழகத்தைதான்(Tamilaga Vetri Kalagam) என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுவும், அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதன் தலைவர் விஜய் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் அசைமெண்டை கொடுத்திருக்கிறார். குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள்தான் அவர்களின் இலக்கு. இந்த சூழலில், ஜோதிமணியும், பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து தமிழக காங்கிரஸ் நகர வேண்டும் என்று மேடையிலேயே பேசியது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 



அதே வேளையில், விஜய் கட்சி தொடங்கியது காங்கிரஸ் விழாவின் முக்கிய மேடை வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புறந்தள்ள முடியாது என்று உணரமுடிகிறது. எது எப்படியோ, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தான் முதன்மை இடத்தில் உள்ளனர். 


மேலும், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார், முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.பி. திருநாவுக்கரசு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.