கோவை அருகே தாயைப் பிரிந்த குட்டிக் குதிரை தனியார் பேருந்தில் இருந்த குதிரைப் படத்தைப் பார்த்து தூரத்திச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பிரசிதி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய இக்கோயிலுக்கு வந்துச் செல்கின்றனர். இக்கோயில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தாயைப் பிரிந்த குதிரைக் குட்டி, தனது தாயை தேடி திரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிறுத்தம் அருகே காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த தனியார் பேருந்தில் ஒரு குதிரையின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. அப்பகுதியில் சுற்றி திரிந்த குதிரைக் குட்டி சாலைக்கு வந்த போது, தனியார் பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்த குதிரை ஸ்டிக்கரை பார்த்துள்ளது.
அப்போது பேருந்தை நோக்கி வந்த குதிரைக் குட்டி பேருந்தை செல்ல விடாமல் வழி மறித்துடன் பேருந்தையே சுற்றி சுற்றி வந்துள்ளது. சற்று நேரத்தில் பேருந்து கிளம்பிய போது, குதிரை படத்தைப் பார்த்தபடியே பேருந்தை துரத்திச் சென்று கத்தியது. ஸ்டிக்கர் குதிரையை தாய் குதிரை என நினைத்து குதிரைக் குட்டி துரத்திச் சென்றதாக தெரிகிறது. குதிரைக் குட்டியின் பாசத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் குதிரையின் செயலை செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காண்போரை கண் கலங்க வைக்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்