கோவை மாநகராட்சி உட்பட்ட 66 வது வார்டு அம்மன்குளம் ராஜீவ் காந்தி நகர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒரு பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.. இந்த கழிப்பறையானது பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.. கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த கழிவறையின் ஒரு பகுதியில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கட்டுமானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறைக்குள் 2 கழிவறைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிவறைக்கு இடையிலே கதவுகளோ அல்லது தடுப்புகளோ கட்டப்படாமல் இருந்தது.




இரண்டு பேர் அடுத்தடுத்து அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிவறை கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருந்ததால், ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முறையான திட்டமிடல் இல்லாமல் கழிவறை கட்டப்பட்டு இருப்பதாகவும், கதவு அல்லது தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயன்படுத்தும் வகையில் இருந்திருக்கும் எனவும் அவர்கள் தெரித்தனர். இரண்டு பேர் பயன்படுத்தும் வகையில் கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.



இந்த நிலையில் ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த கழிப்பறை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் கிண்டலான கருத்துக்களை பகிர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை விமர்சித்தனர்.




இது தொடர்பாக கோவை மாநகராட்சி பொறுப்பு ஆணையாளர் ஷர்மிளா ஒரு விளக்க அறிக்கை அளித்தார். அதில் இந்த மாநகராட்சி கழிப்பிடம் 1995 ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில் பெரியவர்களின் கண்காணிப்பில் உபயோகப்படுத்த வேண்டுமென்பதற்கான கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கதவுகள் இருந்தால் குழந்தைகள் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதால் கதவுகள் பொருத்தப்படவில்லை எனவும், இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி பராமரிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். உபயோகம் இல்லாமல் இருந்த அக்கழிப்பிடம் பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றப்படும் எனவும் கூறிய அவர், விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கழிப்பிடம் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண