சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் மதிவேந்தன் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும். பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். சென்னை மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ளா ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். பிச்சாவரம் சுற்றுலா தலம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும். ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றல தலமாக மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல், படகு சேவை தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் பொங்கலுக்கு ஆண்டு தோறும் இணைய வழியில் பிரமாண்ட கலை விழா நடத்தப்படும். கீழடி அகழ் வைப்பகத்திற்கு தேவையான 34 நிரந்தர பணியிடங்கள் ரூ.1.50 கோடியில் ஏற்படுத்தப்படும். தருமபுரி பெரும்பாலை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு, களஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் முதலைகுலம், அரிட்டாபட்டி, பூலாங்குறிச்சி, தொண்டூர், நெகனூர்பட்டி, ஆகிய ஐந்து கல்வெட்டுகளும் தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும். சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும். இயல், இசை, நாடக மன்றத்தில் வழங்கப்படும் தொகை ரூ.50,000 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையில் லெய்டன் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ponniyin selvan | ‛மீண்டும் ஒரு பஞ்சாயத்து’ - த்ரிஷா, மணிரத்னத்தை கைது செய்ய இந்து அமைப்பு புகார்!
மேலும் படிக்க: HBD Vetrimaaran: வெற்றிகளும், வெற்றிமாறனும்.. பலரும்- அறியாத வெற்றிமாறனின் "பிளாஷ்பேக்"