தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தென்தமிழகம், வட தமிழகம் என மழை மாறி, மாறி பெய்து வந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.


கனமழை, மிக கனமழை அபாயம்:


இந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு கனமழை அபாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள பதிவில், 15-ம் தேதி (இன்று) காலை 8.30 மணி வரை புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழை அபாயம் உள்ள மாவட்டங்களில் சாலைகள் வழுக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் பாதிப்பு, தண்ணீர் தேக்கம், நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரிப்பு உள்ளிட்டவை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






முன்னேற்பாடுகள்:


கனமழை அபாயம் உள்ள மாவட்டங்களில் 7 முதல் 11 செ.மீ. மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், மிக கனமழை அபாயம் உள்ள மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழையும், நாகப்பட்டினத்தில் 15 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


சென்னையில் மழை அபாயம் இருப்பதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: TN Rain: இரவில் கொட்டி தீர்த்த கனமழை...குடியிருப்பு சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி


மேலும் படிக்க: புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது..கல்பாக்கம், மகாபலிபுரத்தில் சீற்றத்துடன் காணப்படும் கடல்