மழை நீர் செல்ல போதிய  மழைநீர் வடிக்கால்வாய் இல்லாததால் ஒவ்வொரு மழைக்கும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

 

செங்கல்பட்டு ( Chengalpattu Rain ) : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாதான்குப்பம் ஸ்ரீநகர்,  கனகபரமேஸ்வரி நகர், லட்சுமி நகர், உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி வீடுகளில் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும்  அவதியில் உள்ளனர். தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட  ராஜேஸ்வரி நகர், முதல் தெரு இரண்டாவது தெரு, உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்துள்ளது, இதனால் மலேரியா கலரா போன்ற நோய்களுக்கு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.



 

இரவு பெய்த கனமழையால் குடியிருப்பு சாலைகளில் மழை நீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் ஒருவாரம் வரை மழை நீர் வடியாமல் தினம் தினம் அவதிபடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதே போன்று சிறிய மழை முதல் பெரிய மழை வரை ஒவ்வொரு மழைக்கும் அப்பகுதி மக்கள் ஒரு வாரம் முதல் மாதம் கணக்கில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மழை நீர் சாலைகளில் செல்வது மட்டுமல்லாமல் வீடுகளிலும் புகுந்து பாம்பு, தேள் போன்ற விஷப் பூச்சிகள் வீட்டுக்குள்  புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளது.



 

சாதான்குப்பம்  ஸ்ரீநகர்,  கனகபரமேஸ்வரி நகர், லட்சுமி நகர், உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு சாலைகளில் முறையான மழை நீர் வடிகால்வாய் இல்லாததால் இதுபோன்ற இன்னல்களில் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி செல்லும் பிள்ளைகள், கல்லூரி செல்பவர்கள் பணிக்கு செல்பவர்கள், கடுமையாக  பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.



 

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஏற்கும் வகையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்து முதல்வர் சிறப்பு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பகுதியில் மழைநீர் வடிக்கால்வாய்  மற்றும் சாலை பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம் திமுகவினர் அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது வரை பணி துவங்கபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தமிழக கடலோரப்பகுதிகள்: 


14.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


வங்க கடல் பகுதிகள்: 


14.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 



15.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 



16.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் அதை ஒட்டிய மத்தியகிழக்கு-தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.