சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, நிலுவையில் வைக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதே பொருள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்திய அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் முதல் கடமை என்றும் குறிப்பிட்டு மாணவர்களிடையே கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமை பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கலந்துரையாடினார். அப்போது, அவர் மாநில அரசின் செயல்பாடுகள், சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்து அவர் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


மாணவர்களுடனான உரையாடலின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது," இந்திய அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் முதல் கடமை. மத்திய அரசோ, மாநில அரசோ இந்திய அரசியல் அமைப்பின் படியே இயங்க முடியும். இந்தியாவில் மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொது பட்டியல் உள்ளது. பொது பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றவில்லை என்றால் மாநில அரசு சட்டம் இயற்றலாம். மத்திய அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் மாநில அரசு சட்டம் இயற்றலாம் ஆனால் அது மத்திய அரசின் சட்டதுடன் பொருந்த வேண்டும்.


சட்டசபையில் எந்த தீர்மானம் வேண்டும் என்றாலும் நிறைவேற்றலாம். ஆனால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியல் அமைப்பின் படி ஆளுநரின் கடமையாகும். தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா?. என்பதை கண்காணித்து விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது. இந்திய அரசியல் அமைப்பின் படி மாநிலத்தின் சட்டமன்றம் என்பது ஆளுநர், சட்டசபை, சட்டமன்ற குழு ஆகியவை அடங்கியது. எனவே ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தின் ஒரு அங்கம். சட்டசபையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டம் ஆகாது. சட்டசபையும் ஒரு அங்கம் மட்டும் தான் அதனால் தான் ஆளுநருக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.


ஆளுநருக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது. ஒன்று, தீர்மானம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்றால் ஒப்புதல் அளிக்கலாம். இன்னொன்று நிலுவையில் வைப்பது. தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. நிலுவை உள்ளது என்றால் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம். மூன்றாவது வாய்ப்பு குடியரசு தலைவருக்கு அனுப்புவது. பொது பட்டியலில் உள்ளது என்றால் அதன் மீது முடிவெடுபதற்காக குடியரசு தலைவரின் கருத்திற்காக அனுப்புவது ஆகும்." என்றார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது


நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,  மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகம், கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றிற்கு எதிராகவும் மக்களை தூண்ட,  நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து  நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது. ஆனால் அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்ததாகவும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


 


தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவருடைய பேச்சுக்கள் பெரும்பாலும் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதோடு, அதற்கு அவர் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் இருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 




மேலும் வாசிக்க..


TN Governor RN Ravi Speech: மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு