தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி தரப்பில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் புதிதாக 5000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 25,587-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தினசரி தொற்று பாதிப்பு 200 ஐ கடந்து பதிவாகியுள்ளது. நேற்று 242 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,216 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து சென்னையில் அதிகப்படியானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 82 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 373 பேர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், திரையரங்கில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதார துறை தரப்பில் அறிவிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்து, இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் சென்னை மாநகராட்சி தரப்பில் மக்கள் பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் மற்றும் அதிகம் பாதிப்புகள் இருக்கும் இடங்களில் மீண்டும் சென்னை மாநகராட்சி தரப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. இவை அணைத்தும் ஏற்கனவே பின்பற்றப்பட்ட விதிமுறைகள்தான் என்றும் புதிய அறிவிப்புகள் எதுவும் தற்போதைக்கு இல்லை எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Corona Spike: தமிழ்நாட்டில் எகிறும் கொரோனா பாதிப்பு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை
EVKS Discharge: 22 நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ஈவிகேஎஸ் இளங்கோவன்