நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுடன் கலந்துரையாடலில் பேசினார். அவரது பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்து பல தருணங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்:


இந்த நிலையில், குடிமைப் பணிகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடனான அவரது சந்திப்பும் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 13 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.


இந்த சூழலில், இன்று மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய பேச்சில், “ நாட்டின் சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை மாற்றம் என பல்வேறு காரணிகளை வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் போராட்டம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி வரையில் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்ப்பட்டுள்ளது.


தூண்டப்பட்ட மக்கள்:


கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும்போதும் கூடங்குளம் அணு உலை வரும் போதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களை தூண்டவும் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது. ஆனால், அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.


பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதிகள் வந்துள்ளது. நாட்டில் பல பயங்கரவாத செயலுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.


13 பேர் உயிரிழப்பு:


ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு தி.மு.க. கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக்களால்  அப்பகுதி மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகாலமாக போராடி வந்தனர். அவர்களின் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய பேரணியாக நடந்தபோதுதான் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்போதைய அ.தி.மு.க. அரசிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி 13 நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நாள் இன்றும் தமிழ்நாட்டு மக்களால் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில், வெளிநாட்டு நிதிகளால் மக்கள் தூண்டப்பட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதாக ஆளுநர் ஆர.என்.ரவி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.