காவல்துறை ரோந்துப்பணியை நவீனப்படுத்த ஸ்மார்ட் காவலர் (E - beat)  என்ற செயலியை காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் காவலர் செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.



 

தமிழ்நாட்டில் முதல்முறையாக..

 

இதனை அடுத்து தமிழ்நாட்டில் முதல் முறையாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஸ்மார்ட் காவலர் (E - beat)  என்ற செயலியை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மூன்று காவல் நிலையங்களில் , சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு நகர காவல் நிலையம், மதுராந்தகம் காவல் நிலையம் மற்றும் மகாபலிபுரம் காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களில், காவலர் ஸ்மார்ட் செயலி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

 

செயலியில் என்ன இருக்கும் ?

 

குற்றம் நடைபெறும் இடங்கள், காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு வெளியூர் செல்பவர்களின் வீடுகளின் முகவரி, ரவுடிகளின் தங்கும் இடங்கள் ஆகியவை அந்த செயலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும், தினமும் காவலர்கள் அந்த பகுதிக்கு ரோந்து சென்று கண்காணிக்கிறார்களா, என்பது குறித்து இந்த செயலி லொகேஷன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.



 

கண்காணிப்பை  எளிமையாக்கும்...!

 

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகர காவல் பகுதியில், 62  கண்காணிப்பு பகுதிகளும், குற்றம் சம்பவம் நடைபெறலாம் என்ற பகுதிகள் 50 இடங்களும் இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுராந்தகத்தில் 48 இடங்களும் , மகாபலிபுரத்தில் 36 இடங்களும்  செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் இரவு பணிக்கு அமர்த்தப்படும் காவலர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டும் பணியை சரியாக செய்கிறார்களா , காவலர்கள் எங்கெங்கே சென்றார்கள் என்பது குறித்த விவரம் , மறுநாள் காலை டேஷ்போர்டு  என்ற பகுதியில், அறிக்கையாக உயர் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கும், இதன் மூலம் காவலர் ஒருவர், பணியை சரியாக செய்யவில்லை என்றால், உடனடியாக கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க எளிமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

காவலர்களுக்கு எப்படி உதவும் ?

 

ஒரு பெரிய குற்றச்செயல் நடைபெறுகிறது என எடுத்துக் கொள்வோம், அதனை சமாளிக்க போதிய காவலர்கள் இல்லை என்றால், எமர்ஜென்சி என்ற பொத்தனை அழுத்தினால், அருகில் இருக்கும் காவலர்களுக்கு இந்த செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்படும், உடனடியாக அப்பகுதிக்கு மற்ற காவலர்கள் சென்று நடவடிக்கை எடுக்க இது உதவும்.

 

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 

இந்த  காவலர் ஸ்மார்ட் செயலியில், ஸ்மார்ட் காவலர் (E-Beat)செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப் பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவி தேவைப்பட்டாலோ அதுகுறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இந்த செயலி இருக்கும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த வெளியீட்டு விழாவில், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பரத் மற்றும்  துரைப்பாண்டி , காவல் ஆய்வாளர்கள் வடிவேல் முருகன், ருக்மாங்கதன், தர்மதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.