தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு, மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
ஏரி நிலவரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டு 700 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 330 கன அடி அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து சுமார் 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 19.87 அடியை எட்டியுள்ளது. மழை பெய்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் அல்லது படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரி
பூண்டி ஏரியில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரி
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிப்பால் 10.30 மணி அளவில் 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்பு
11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.