மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதய விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே நடத்த அனுமதிக் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 

சென்னையை சேர்ந்த ராஜ ராஜ சேனை அறக்கட்டளையின் நிறுவனர் முரளி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் சோழ பேரரரசர் ராஜ ராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும்  பெருமையாக கொண்டாடப்படுவது போல, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் நவம்பர் 13ம் தேதி கொண்டாட திட்டமிட்டு, அதற்கு அனுமதிக் கோரி மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

 

ராஜ ராஜ சோழனின் பெருமையை மூடி மறைக்கும் வகையிலேயே அனுமதி மறுத்த மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள்தாகவும், சந்தேகம் எழுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். 

 

எனவே நவம்பர் 13ம் தேதி அல்லது மற்றொரு நாளில் சதய விழா கொண்டாட அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் நெரிசல்மிக்க மாட வீதிகளில், 500 பேர் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதுபோன்ற சதயவிழா சென்னையில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார்.

 

இதுவரை இல்லாமல் சென்னையில் தற்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கேள்வி கேள்வி எழுப்பிய நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அல்லது வேறு இரு இடத்தில் நடத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கபட்டது. 

 

இதையடுத்து வழக்கு குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தினர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.