வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை மட்டும் ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபார்முலா - 4 கார் பந்தயம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தீவுத்திடல் அருகே நடைபெற இருந்தது.


அந்த சமயத்தில் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் காரணமாக இந்த கார் பந்தயத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கார் பந்தயத்தை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில், சென்னையில் மழை தீவிரம் அடையும் முன்பாகவே வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் அண்ணா சாலையில் நடைபெறும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி: சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது பேசிய அவர், "ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை மட்டும் ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம். அன்று, பிற்பகல் தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இரவு வரை கார் பந்தயம் நடைபெறும். கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கார் பந்தயம் நடை பெறும்போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது" என்றார்.


இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; காவல்துறை விசாரணையா? இயக்குநர் நெல்சன் திட்டவட்ட மறுப்பு