சென்னை, அடையாறில் உள்ள இயக்குநர் நெல்சனின் வீட்டுக்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர், அவரிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்தியதாக வெளியான தகவலை, நெல்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 


தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பெரம்பூரில் அவர் கட்டி வரும் வீடு அருகே கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 


முக்கியக் குற்றவாளி என்கவுன்ட்டர் 


இந்த நிலையில் முக்கியமான கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்ட திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பலரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்தவர் மொட்டை கிருஷ்ணன். ஏற்கனவே சம்போ செந்தில் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதால் அவருடைய கூட்டாளிகளும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் மொட்டை கிருஷ்ணன் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடப்பதற்கு முன்பும் பின்பும் மொட்டை கிருஷ்ணன் தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார் பிரபல திரைப்பட இயக்குநரான நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


மோனிஷா மொட்டை கிருஷ்ணனனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், வெளிநாடு தப்பித்து செல்வது சம்பந்தமாக  செல்போனில் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.


நெல்சனிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணையா?


தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணனிடம் மோனிஷா அடிக்கடி தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியானதை அடுத்து,  மோனிஷாவின் கணவரான பிரபல திரை இயக்குநரான நெல்சன் திலிப் குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. சென்னை, அடையாறில் உள்ள இயக்குநர் நெல்சனின் வீட்டுக்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர், அவரிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது. 


ஆனால், இந்தத் தகவலை இயக்குநர் நெல்சன் மறுத்துள்ளார். இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ’’என்னிடம் கொலை வழக்கு தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. விசாரணை குறித்து சம்மன் எதையும் போலீசார் அனுப்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.