ஸ்பேஸ் ஜோன் இந்தியா - மார்ட்டின் குழுமம் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ரூமி 1’ ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பியது.
புதிய முயற்சி
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு சாதனையாக ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து தயாரித்த ஹைபிரிட் ராக்கெட் ' ரூமி 1' இன்று காலை 7.02 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு அந்த செயற்கை கோள்களை புதிய வட்டப்பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பியது.
இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனை
இந்திய விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக ரூமி ஒன் ராக்கெட் இந்தியாவின் முதல் 0 முதல் 120 டிகிரி வரை வெவ்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஏவும் ஹைட்ராலிக் மொபைல் ஏவுதலத்தில் இருந்து மூன்று கியூப் செயற்கைக்கோள்களை சுமந்து சென்று புது சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தி வெறும் 7 நிமிடங்களில் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்
இந்த ராக்கெட் காஸ்மி கதிர்வீச்சின் தீவிரம் புற ஊதா கதிர்வீச்சின் தீவிரம் காற்றின் தரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வளிமண்டல நிலைகளை கண்காணிக்கும் 3 சோதனை செயற்கைக்கோள்களுடன் 50 வெவ்வேறு சிறிய எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தியது. இவை ஒவ்வொன்றும் அதிர்வு, முடுக்குமானி அளவீடுகள், ஓசோன் அளவுகள் போன்ற வளிமண்டல நிலைகளின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளன.
இந்தநிகழ்ச்சியில் இந்தியாவின் சந்திர மனிதன்" என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், மார்டின் குழுமம் நிர்வாக இயக்குனர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
பெருமைப்படுகிறேன் - மயில்சாமி அண்ணாதுரை
இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ரூமி 1 இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிகழ்ச்சிகளில் புதிய அளவுகோல்களை அமைத்திருப்பதை கண்டு நான் பெருமைப்படுகிறேன். இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது என்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஒத்துழைப்பு புதுமை மற்றும் எல்லை இல்லா ஆற்றலை நிரூபித்து இருக்கிறது.
இந்த பணி ஒவ்வொரு தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல இக்கால விண்வெளி முயற்சிகளுக்கு உத்வேகமாகவும் இருக்கும். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தி விண்வெளியில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதற்காக ஸ்பேஸ் ஜோன் மற்றும் மார்ட்டின் இந்தியா குழுமத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.