முதல்வன் படத்தில் வரும் ஒருநாள் முதல்வர் அர்ஜூன் பரபரவென பல நடவடிக்கைகளை எடுப்பார். போன் செய்வார், சாமானியனிடம் பேசுவார், ஊழல் அதிகாரிகளை நீக்குவார். பரபரப்பாக ஏ ஆர் ரகுமான் பிஜிஎம் போட விறுவிறுப்பாக காட்சிகள் ஓட பார்க்கும் நாம் சிலுர்த்து போய் சில்லறையை வீசாத குறையில் அமர்ந்திருப்போம். ஆனால் இதெல்லாம் சினிமாவின் தானே சாத்தியம் என்ற ரியாலிட்டி ஒருபக்கம் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும்.  ஆனால் இன்றைய காலக்கட்டம் சினிமாக்காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நிஜத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சோஷியல் மீடியா. என்ன? குழப்புகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? சங்கதி இருக்கிறது. 




மருத்துவர் பிரபு மனோகரன் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை ஷேர் செய்கிறார். அதில் இடம் மாறுதல் கலந்தாய்வு குறித்த அவரது துயரம் தெரிகிறது. இடம் மாறுதலுக்கான கலந்தாய்வில் அவரது பெயர் விடுபடுவதும் அதற்காக அவர் அலைந்து திரிவதுமாக இருந்துள்ளார்.  கலந்தாய்வால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் ‘இதற்கு மேல் என்னால் முடியாது என்னை கருணைக்கொலை செய்து விடுங்கள்’ என்றும் வலியை பதிவு செய்துள்ளார். விரக்தியின் உச்சியில் கருணைக்கொலை என்ற வார்த்தையை ஒரு மருத்துவரே உச்சரித்து பதிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பலர் சோக எமொஜியை அழுத்தினர், சிலர் கமெண்டுகளில் ஆறுதல் கூறினர்.அதில் ஒரு கமெண்டாக வந்து விழுந்தது மருத்துவரும் திமுக எம்.எல்.ஏ.வுமான எழிலனின் வார்த்தைகள். 'தோழர் வாட்ஸ் அப் பண்ணுங்க'. 


ஒரு மருத்துவரின் குமுறல், அரசின் ஒரு அங்கமான எம்.எல்.ஏ. காதுக்கு சென்றது. அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு வருகிறது தொலைபேசி அழைப்பு. பேசியது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். பிரச்னையை கேட்டறிந்த அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார். ஒரு கருணைக்கொலைக்கான விரக்தி பதிவு அரசின் காதுகளுக்கு சென்று முடிவுக்கு வருகிறது. எல்லாமே சில மணி நேரங்களில். 




உரிய பதில் வந்ததால் விரக்தி பதிவை நீக்கிய மருத்துவர், அரசுக்கு நன்றிதெரிவித்து பதிவிடுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் அரசை நினைத்து நெகிழ்ந்துபோவதாக குறிப்பிடுகிறார். இப்போது அவரது பதிவுக்கு இதய எமோஜிகள் பறக்கின்றன. கமெண்டுகளில் வாழ்த்துகள் குவிகின்றன. முதல்வன் பட காட்சியைப் போலவே பேஸ்புக்கில் நடந்து முடிந்த இந்த பரபரப்பும், சம்பவமும் அரசின் துரித நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில் இதுதான் சோஷியல் மீடியாவின் வெற்றி. 


சோஷியல் மீடியாவால் பல அதிரடிகள் நிகழ்வதல்ல இன்று மட்டுமல்ல, கடந்த ஆட்சியில் கொரோனா நேரத்தில் ட்விட்டரில் கேட்கப்பட்ட உதவிகளுக்கு நேரடியாக பதிலளித்து கெத்து காட்டினார் எடப்பாடி பழனிசாமி. மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் கணக்கு மூலம் எத்தனையோ வெளிநாட்டு இந்தியர்களின் கைகளை பற்றியுள்ளார். பிரச்னைகளை அரசின் காதுகளுக்கு எளிதாக கொண்டு செல்ல முடிவதும், அதனை தீர்த்துவிட மக்களுக்கான அரசு  தயாராக இருப்பதும் நல்லாட்சியின் அறிகுறி. இது சோஷியல் மீடியாவோடு நின்றுவிடாமல், துயரம் பாடும் கடைகோடி குரலுக்கும் அரசு துரிதம் காட்டும் நிலை வந்துவிட்டால் தினம் தினம் முதல்வன் படக்காட்சி ஓடுக்கொண்டே இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.


புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்