புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவில் இருந்து காணொலி காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலர் அசோக் குமார், உள்ளாட்சி துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண், செய்தித்துறை செயலர் உதயகுமார், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் ரவி பிரகாஷ், புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்பட பலர் கலந்துகொண்டனர்.




அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் 6 கிராமங்களும், காரைக்கால் மாவட்டத்தில் 4 கிராமங்களும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு, நான் கடிதம் எழுதி இருக்கிறேன். ஆனால், இந்த சாதனையை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சுதந்திர தினத்திற்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே எதிர்வரும் 3-வது அலையை சமாளிக்க முடியும். தடுப்பூசி போடுவதை நாம் தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக ஒரு வாரம் முழுவதும் தடுப்பூசி பிரச்சார வாரமாக கடைபிடித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.




புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் குறிப்பிட்ட கால அளவிற்குள் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். அரசு துறை செயலர்கள் தங்களது மேற்பார்வையில் உள்ள துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சலுகைகளை அறிவித்து ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள். அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என அவர் கூறினார்.




கொரோனாவின் இரண்டாவது அலை தொற்றானது கிராமங்களில் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல் கட்டமாக பல்வேறு பயிற்சிகளும் மற்றும் மாபெரும் தடுப்பு ஊசி முகாம்களும் நடத்தப்பட்டன. இரண்டாவது கட்டமாக கொரோனா பற்றிய பல்வேறு பயிற்சிகளுடன் கூடிய 100 சதவீத தடுப்பூசி செலுத்தி முன்மாதிரி கிராமங்களாக செயல்பட புதுவை அரசின் ஊரக வளர்ச்சி துறையின் செயலாளர் ரவிபிரகாஷ் தலைமையில் 100% தடுப்பூசிபோடும் திட்டத்தை மூன்று வட்டாரங்களான வில்லியனூர்,அரியாங்குப்பம் மற்றும் காரைக்காலில் உள்ள கிராமங்களில் 100% கோரோனா தடுப்பூசி செலுத்திய முன்மாதிரி கிராமமாக உருவாக்க அறிவுறுத்தினார். புதுச்சேரி மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100% தடுப்பூசி எடுத்துக் கொண்ட முதல் கிராமமாக புதுக்குப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுக்குப்பம் கிராம மக்களிடம் வழங்கியது குறிப்படத்தக்கது.