தமிழ் நாட்டில் கொரோனா பாதிப்பு மிக தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடத்த மே மாதம் 10-ஆம் தேதி ஆரம்பித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியது புதிதாக பதவியேற்ற திமுக அரசு. இதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் மருந்து கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் மூடும்படியும் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ துறையின் தீவிர முயற்சியால் மாவட்டம் தோறும் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது .
கொரோனா நோய் தொற்று மெல்ல குறைந்து வரும் சூழ்நிலையில் , கடந்த திங்கட்கிழமை அன்று தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து அதன் மூலம் காய்கறி , மளிகை பொருட்கள் , சிறு அங்காடிகள் , அரசு மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அணைத்தும் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படலாம் என்று அறிவித்திருந்தது. எனினும் தமிழ் நாட்டில் இன்னும் மது கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை . மதுபான கடைகளின் தொடர் மூடலை சிறிதும் எதிர் பார்க்காத குடி பிரியர்கள் , கள்ளத்தனமாக விற்கப்படும் வெளிமாநில மதுபானங்கள் தொடுங்கி உள்ளூர் சாராய வகைகள் வரை தேடி அலைவதும் , வீட்டில் இருந்தபடியே யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பார்த்து, குக்கர் மற்றும் இதர வீடு உபயோக பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சாராயம் தயார்செய்வது உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குடிப் பிரியர்களின் விபரீத முயற்சிகளால் ஆங்காங்கே மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, பூட்டி இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளின் பூட்டை உடைத்தும், சுவற்றை துளைபோட்டு மதுபானங்களை கொள்ளையடிக்கும் துணிகர குற்ற சம்பவங்களும் மாவட்டங்களில் அதிகரித்து வண்ணம் உள்ளது .
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு அரசு டாஸ்மாக் கடையில் இதுபோன்ற ஒரு துணிகர கொள்ளை நடந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த தென்னந்தியலம் மாவட்டத்திலுள்ள அரசு டாஸ்மாக் (கடை எண் 11368) கடையை , நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் , டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்ட மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் , மதுபான கடையின் சுவற்றைத் துளைபோட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து ரத்தினகிரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த கடையின் மேற்பார்வையாளர் ஸ்ரீதர் மற்றும் விற்பனையாளர் சார்லஸ் ஆகியோரை அழைத்து கடையை திறக்க செய்து மதுபானங்கள் திருடப்பட்டுள்ளதா என்று விசாரணை மேற்கொண்டனர் .
விசாரணையில் 15 கேஸ் உயர் ரக மதுபான பாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் எனவும் அக்கடை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த ரத்தினகிரி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விசாரணையின்போது ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் உடனிருந்தனர் .