வைகுண்ட ஏகாதசி பிறந்தது எப்படி தெரியுமா ?
Vaikunta Ekadasi 2023 in Tamil: தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு வாய்ந்தது ஆகும். அதில், மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த மார்கழி மாதம் கருதப்படுகிறது. மார்கழி மாதம் வந்தாலே வைணவத் தளங்கள் களைகட்டி காணப்படும்.
வைகுண்ட ஏகாதசி
இந்த மார்கழி மாதத்தில் வரும் நாட்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று கண்விழித்து கோயிலில் சாமி தரிசனம் செய்தால் ஏராளமான நன்மைகளும், புண்ணியமும் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். அந்த வைகுண்ட ஏகாதசி ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது தெரியுமா. இதில் விரிவாக காணலாம்.
விண்ணுலகத்தில் தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் ஒருவன் அச்சுறுத்தி வந்தான். இதனால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அவனது சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு போரிட்டார் என்பது நம்பிக்கை.
பிறந்தது எப்படி?
முரனிடம் போரிட்டு அந்த போரில் மகாவிஷ்ணு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு பிறகு மகாவிஷ்ணு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மகாவிஷ்ணுவிடம் தோல்வியை தழுவிய முரன் மகாவிஷ்ணுவை நோக்கி வாளுடன் பாய்ந்து வந்தான். அப்போது, மகாவிஷ்ணு தன் உடலில் இருந்து மாபெரும் சக்தி ஒன்றை பெண்ணாக வெளிப்படுத்தினார். அந்த பெண் முரனுடன் போரிட்டார். அந்த பெண் முரனை வென்றார் என்பது நம்பிக்கை.
அந்த அசுரனை வீழ்த்தி தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு மகாவிஷ்ணு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். முரனை வீழ்த்திய அந்த நாள் ஏகாதசி என்றும், அந்த நாளில் பெருமாளை வணங்குபவர்களுக்கு வைகுண்ட பதவி வழங்கப்படும் என்றும் பெருமாள் வரம் அளித்தார். இந்த நாளே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புராணங்கள் வைகுண்ட ஏகாதசி உருவானதாக கூறுகின்றன.