தென் மாவட்ட வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா சென்னையில் விளக்கம் அளித்தார்.
35 பேர் உயிரிழப்பு:
இதுதொடர்பாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன. உணவு பாக்கெட்கள் மற்ற மாவட்டங்களில் தயாரித்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உணவு தயாரிக்கப்பட்டு தூத்துக்குடிக்கு அனுப்புகிறோம். பிற மாவட்டங்களில் இருந்து பணியாட்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து சேவையும் விரைவில் சீரமைக்கப்படும். மழை வெள்ளத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 1200 மெட்ரிக் டன் லாரி மூலமாகவும் 81 டன் ஹெலிகாப்டர் மூலமாகவும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகிவிட்டது. தென் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமான தாமிரப்ரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.