சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூர், 2ஆவது ரயில்வே தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (34) இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவரது மனைவி சூசைமேரி (30) இவர்களுக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் தியாகராஜன் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையானவர், சூசை மேரியும் தினமும் கூலி வேலைக்கு செல்வதால், குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை.



இதனால் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை வேல்நகர், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு நான்கு மாதத்துக்கு முன் ஆபேல் என்கின்ற 5 வயது மகனை அனுப்பியுள்ளார். இந்த நிலையில் சூசை மேரியின் சகோதரி தார்த்தி, சில வாரங்களுக்கு  முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மகள் மேரி (20)  (திருமணம் ஆகவில்லை) சிறுவன் ஆபேலை கவனித்து வந்துள்ளார்.




இந்தநிலையில் சிறுவன் ஆபேல் திடீரென மயக்கம் அடைந்ததாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்த போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக இதுகுறித்து  பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுவனின் உடல் முழுவதும் தீ காயங்கள் மற்றும் அடித்த அடையாளங்கள் இருந்துள்ளன. இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடந்தனர். இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.




இதையடுத்து குழந்தையை கவனித்து வந்த மேரி என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த நான்கு மாதமாக வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுவனை அடித்து துன்புறுத்தியதாகவும் அடிப்பதை யாரிடமாவது கூறினால் மாடியில் இருந்து கீழே தள்ளி விடுவதாக மிரட்டியதால், அந்த சிறுவன் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாக மேரி போலீசாரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 16.09.21 அன்று இரவு 8 மணி அளவில் சிறுவனை அடித்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் குழந்தையை அக்கா அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து மேரியின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தையைக் கொலை செய்ததற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.