தந்தை பெரியார் அவர்களின் 143 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சிறிது நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி இன்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளானது சமூக நீதி நாளாக தமிழகம் முழுவதும் அனைவராலும் கொண்டப்பட்டு வருகிறது, இந்நிலையில் பெரியார் பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பெரியார் தேநீர் விடுதி நடத்தி வரும் இளந்திரையன் என்பவர் 2 ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்தார்.

 



 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள பெரியார் தேநீர் விடுதி கடையில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளை யொட்டி தேநீர் கடையில் 2 ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி இன்று பெரியார் பிறந்த நாளையொட்டி ஆறாம் ஆண்டாக 2 ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்யப்பட்டது பொது மக்கள் வாங்கிப் பருகி மகிழ்ந்தனர். இதுகுறித்து உரிமையாளர் இளந்திரையன் கூறுகையில், பகுத்தறிவாளர், பக்தியாளர்கள், எதிரிகள், துரோகிகள் என எல்லோரும் இன்று உச்சரிக்கும் பெயர் பெரியார். இந்நிலையில் விருத்தாசலம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 500 பேராவது பெரியார் பெயரை உச்சரித்து வருகின்றனர்.

 



 

எங்கே இருக்கிறாய் பெரியாரில், எங்கே போகிறாய் பெரியாருக்கு போகிறேன் என்று சொல்லுமளவுக்கு பெரியார் தேநீர் விடுதி வளர்ந்திருக்கிறது, இன்னும் வளர்ந்தும் வருகிறது. பெரியார் என்கிற பெயரால் நமக்கு பெருமை. பெரியார் என்கிற பெயருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற கூட்டுத் தோழர்களான தம்பிகள் சிலம்பரசன், இராமராஜ் ஆகியோரின் அளப்பரிய உழைப்பு, தோன்றாத் துணையாக நின்று பெரியாரை கண்ணெனத் தாங்கும் தோழர்கள், ஊழியர்கள் என்பதை கடந்து கடைக்கு உரியவர்களான பணியாளர்கள், பெரியாரை உயர்த்த வேண்டுமென்கிற வாடிக்கையாளர்களின் துணையால் பெரியார் கொள்கை போல் பெரியார் தேநீர் விடுதி வெல்கிறது.



 

கடையின் சிறப்பு என்னவென்றால் சிறு தானிய உணவு வகைகளில் தயாரிக்கப்பட்ட, அதாவது கம்பு மற்றும் கேழ்வரகு கொழுக்கட்டை சுண்டல் வகைகள் மற்றும் எலுமிச்சை, பொதினா, சுக்கு, மல்லி தேனீர் வகைகள் என பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்துவரப்படுகிறது. இன்னும் வரும் அனைத்து ஆண்டுகளும் இவ்வாறே தொடர்ந்து செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் அதனை கண்டிப்பாக செய்வேன் எனவும் குறிப்பிட்டார். இதுமட்டுமின்றி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த கடைக்கு வந்து தேனீர் அருந்தி உள்ளார்.