இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியை குடியரசு நாளாக கொண்டாடுகிறது. இந்த வருடம் இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ஆம் ஆண்டில் இந்தியா அரசியல் சாசன நிர்ணய சபை சாசனத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 26 அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கிடையேதான் 26 ஜனவரி  குடியரசு தினமாக நாடெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.



 


 

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊராட்சிகள் ,ஊராட்சி ஒன்றியங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள், உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றி அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள கரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



 

கரும்பாக்கம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சாதி, மதம் கடந்து தங்களுடைய மத அடையாளத்துடன் வந்து குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 70 வயது மூதாட்டி ஆன இருளர் இனத்தை சேர்ந்த கன்னியம்மாள் என்பவர் தேசிய கொடியை ஏற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாட்டை கரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் துணைத் தலைவர் சேகர் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து உரிமை மறுக்கப்பட்டு வரும் சமூகமாக இருந்து வரும் பழங்குடியினர், சமுதாயத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கையில் தேசியக் கொடி ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மூதாட்டி தெரிவிக்கையில், எனது கையால் என்னுடைய கிராமத்தில் தேசியக்கொடியை ஏற்ற வைத்த சம்பவம் மகிழ்ச்சியை அளிக்கிறது. கிராம மக்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.