போக்குவரத்து தொழிலாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.


தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை:


இந்த நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது மக்களுக்கும், தமிழக அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருப்பதால் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், சென்னை போக்குவரத்த கழகம் சென்னை மாநகர போக்குவரத்துக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 9ம் தேதியன்றும், 9ம் தேதிக்கு பின்னரும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.


போராட்ட அறிவிப்பால் பதற்றம்:


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். தொடர் விடுமுறை என்பதாலும், தமிழர்கள் பண்டிகை என்பதாலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு குடும்பங்களுடன் செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் செல்வார்கள்.


இந்த சூழலில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக, சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்பட 23 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கடந்த 3ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்காத காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


பயணிகள் குழப்பம்:


போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்த தேதிக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதாலும், போராட்டத்திற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படாத காரணத்தாலும் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல தயாராக இருக்கும் மக்கள் மிகுந்த குழப்பத்திலே உள்ளனர்.  


மேலும் படிக்க: Pongal Parisu Thogai 2024: நாளை முதல் டோக்கன்.. 10-ஆம் முதல் தொடங்கும், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.. முழு ரிப்போர்ட்


மேலும் படிக்க: Pongal Parisu Thogai 2024: பொங்கலுக்கு ரூ.1000 இருக்கு.. ஆனா யாருக்கு கிடைக்கும்? யாருக்கு இல்லை? முழு விவரம்..