தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வருகிறது. காலை முதலே கோடை வெயில் காய்ந்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், ஓரகடம், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் கோடை வெப்பம் தணிந்து உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக நேற்று மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று இரண்டு மணி நேரத்தில் சுமார் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று மழை பெய்து இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 


1. வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


2. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 6-ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.




06.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


07.05.2023 மற்றும் 08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


09.05.2023 மற்றும் 10.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை : 


06.05.2023 முதல் 10.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.