கோடை காலத்தில் நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் அனல் காற்றைக் கருத்தில் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க உடனடியாக முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு 11 மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

11 மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு:

இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 3,798 பேர் உயிரிழந்துள்ளனர் என என்சிஆர்பி தரவுகள் கூறுகின்றன. இதை சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கைகளின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், தங்குமிடங்களை வழங்குதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல், பணி நேரத்தை மாற்றியமைத்தல் மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நிலையான நடைமுறைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கொளுத்தும் வெயில்:

வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நிலையான நடைமுறைகளை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமூக கூடங்கள் போன்ற பொது இடங்களை போதுமான காற்றோட்டம், மின்விசிறிகள், குடிநீர் மற்றும் அடிப்படை மருத்துவ பொருட்களுடன் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அதிகபட்சமாக வேலூரில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்றைய நிலவரப்படி, வட தமிழக உள் மாவட்டங்களில் 102 டிகிரியும், தென் தமிழக உள் மாவட்டங்களில் 99 டிகிரியும், கடலோரப் பகுதிகளில் 97 டிகிரியும் வெயில் கொளுத்தியது. 

இதையும் படிக்க: SETC Luxury Buses: உடல் வலி செலவும் கம்மி - TN to பெங்களூரு கேரளா - உயர் சொகுசு பேருந்துகளை இறக்கும் SETC