தான் சவால்களை விரும்புவதாகவும், அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவது முதன்மை பொறுப்பு என்றும் இந்த விவகாரத்தில் எந்த அலட்சியத்தையும் ஏற்க முடியாது என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.

"எதையும் இலவசமாக வாங்கும் பழக்கம் எனக்கு இல்லை"

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் இன்று நடத்திய 'ஐ லைக் சேலஞ்ச்ஸ்' புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய துணை ஜனாதிபதி தன்கர், "சிறிது நேரத்திற்கு முன்பு, 'நீங்கள் [புத்தகத்தை] இலவசமாகப் பெற மாட்டீர்கள்' என்று ஆளுநர் என்னிடம் கூறினார். எனக்கு எதையும் இலவசமாக எடுக்கும் பழக்கம் இல்லை.

உங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், உங்கள் செயல்களின் பலன்களுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. சவால்கள் வரும்போதெல்லாம் அவை வரும். சுவர்களுக்கும் காதுகள் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு சவால்கள் வரும். எனவே, அந்த சவால்கள் பற்றி நீங்கள் உங்களுடன் கூட விவாதிக்க வேண்டாம். ஆனால், நீங்கள் ஒருபோதும் கடமையின் பாதையில் இருந்து விலகக்கூடாது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காலப்போக்கில் எல்லாம் மறந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படியல்ல. அவசர நிலையை மறக்க முடிந்ததா? பல காலம் கடந்து விட்ட நிலையில் அவசர நிலையின் இருண்ட நிழல் தற்போதும் நமது கண்களுக்கு தெரிகிறது.

 

மனம் திறந்த துணை ஜனாதிபதி:

இந்திய வரலாற்றில் காரணமின்றி மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதித்துறைக்கான அணுகல் தடுக்கப்பட்ட இருண்ட காலம் அது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்" என்றார்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு நபரும் நிரபராதி என்று கருதப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். இது தனது உறுதியான நம்பிக்கை என்றும் ஜனநாயகத்தில் குற்றமற்றவர் என்பதற்கு தனி முக்கியத்துவம் உண்டு என்று அவர் கூறினார். ஆனால், குற்றம் எதுவாக இருந்தாலும், அது சட்டப்படி அணுகப்பட வேண்டும் என்றும் ஜெகதீப் தன்கர் கூறினார்.