நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் காவல்துறையால் இருளர் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சிறை மரணங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் வரவேற்பு கிடைத்த நிலையில், இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தின் அடையாளமான அக்னி கலசத்தை காலண்டர் ஒன்றில் பயன்படுத்தியதாக கூறி பாமக மற்றும் பல்வேறு வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு இத்திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தமும் தெரிவித்திருந்தார்.  




இந்நிலையில் இது குறித்து பல்வேறு வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் சூர்யா மீதும் படத்தின் இயக்குனர் ஞானவேல் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார்களை அளித்து வந்தனர். இதேபோல ருத்ர வன்னியர் சேனா அமைப்பை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு, தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக படமெடுத்த சூர்யா மற்றும் ஜெய்பீம் பட தயாரிப்பாளர் ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சந்தோஷ் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.




இதுகுறித்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், புகார்தாரரின் மனுவின் அடிப்படையில், சட்டத்தை விதிமுறையின் படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வேளச்சேரி ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். மேலும் உத்தரவு கிடைக்கப்பட்ட 5 வேலை நாட்களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்ற 20ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.




 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்