இரு தினங்களுக்கு முன்பு கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று ஷவர்மா வாங்கி சாப்பிட்டனர். பின்னர் சுமார் 15 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள். ஷவர்மா சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஷவர்மாதான் அவர்களுக்கு ஃபுட் பாய்சனாக மாறியது தெரியவந்தது. இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11-வது படிக்கும்  மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 



இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை செய்தனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் இரண்டு குழுவில் தலா  5 பேர் கொண்ட குழு பிரிந்து காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஷவர்மா விற்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் கோழி கறிகள் குறித்தும் ஷவர்மாவுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களின் தரம் குறித்தும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி கடையின் உணவு மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். 


 

கடைகளில் பாதுகாப்பின்றி பிளாஸ்டிக் பயன்படுத்தி சவர்மா தயாரிக்கும் 10 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் இயங்கும் கடையில் பழைய கோழி கறியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இருப்பதால், மாதிரிகளை எடுத்துக்கொண்டு கிண்டியில் ஆய்வுக்காக அனுப்பியுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் என்று கடை கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்