சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.


 சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் துணை அணிகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




’முக்கிய ஆலோசனைகள்:


இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது. அதன்படி, கட்சியின் உட்கட்சி விவகாரம், திமுக நிர்வாகிகள் செயல்பாடுகள், குறிப்பாக மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் கைப்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக முனைப்புடன் உள்ளது. இதற்காக, கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளைச் சேர்க்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.


புதிய நிர்வாகிகள்:


இதற்கு முன்னதாக திமுகவில் புதிய நிர்வாகிகளை கட்சித் தலைமை நியமித்துள்ளது. அதன்படி, தி.மு.க.வின் புதிய மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆகிய பொறுப்புக்கான உறுப்பினர்களை தி.மு.க. நியமித்துள்ளது. 


புதிய அறிவிப்பின்படி, தி.மு.க. இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.  தி.மு.க.வின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி, தற்போது துணை பொதுச்செயலாளராக பதவியேற்று இருக்கும் நிலையில் தற்போது புதிய மகளிர் அணி செயலாளராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க:Gujarat Election: குஜராத்தில் தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு...! ஆர்வத்துடன் குவிந்த வாக்காளர்கள்...! பலத்த பாதுகாப்பு..


மேலும் படிக்க: 2000 ஏக்கர் பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..! விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாய் வரை இழப்பு..!