Gujarat Election: குஜராத்தில் தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு...! ஆர்வத்துடன் குவிந்த வாக்காளர்கள்...! பலத்த பாதுகாப்பு..

89 தொகுதிகளுக்கு உட்பட்ட குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

89 தொகுதிகளுக்கு உட்பட்ட குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய முதற்கட்ட தேர்தலில் 19 மாவட்டங்களிலும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஆர்வத்துடன் வரத்தொடங்கியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.

Continues below advertisement

முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 70 பெண்களும் 339 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பாஜக காங்கிரஸ்  இடையே 89 தொகுதிகளிலும் நேரடி போட்டி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை 2 வேட்பாளர்கள் திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் 87 மட்டுமே உள்ளனர்.

முதற்கட்ட தேர்தல்:

முதற் கட்டமாக நடைபெற உள்ள தேர்தலுக்கு, 25 ஆயிரத்து 434 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகர் பகுதியில் 9 ஆயிரத்து 18 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 16 ஆயிரத்து 416 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.38 ஆயிரத்து 749 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தில் மொத்தமாக  மொத்தமாக 4 கோடியே 91 லட்சத்து 17 ஆயிரத்து 708 பேர் உள்ள நிலையில் , முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 3கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

வாக்காளர்கள் விவரம்:

இதில் ஆண்கள் 1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேரும், பெண்கள் 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் உள்ளனர். முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 42 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். இதனால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி சஸ்பெண்ட் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 

மோடி வேண்டுகோள்:

இந்த தேர்தலில் அதிக வாக்குகள் அளித்து வாக்குப்பதிவு சதவீதம் முன் எப்போதும் அல்லாத அளவு உயர்த்தி புதிய சாதனை படைக்க வேண்டும், அதே போல் முதல் முறை வாக்களிப்பவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது. 

பலத்த எதிர்பார்ப்பு:

ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டனர். இருப்பினும், கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் பிரச்சாரம் சற்று மந்தமாகவே இருந்தது. 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கடைசி நாளான நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola