நடந்த முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது, இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களில் சென்னை ஜெ.ஜெ.நகரில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திமுகவில் சேர்ந்த சிலர் உடைத்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் பல கண்டனங்கள் எழுந்த தொடர்ந்து உடைக்கப்பட்ட புகைப்படம் மீண்டும் பொருத்தப்பட்டது.



 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவம் பொறித்த கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  இதனை அப்பகுதியை சேர்ந்த திமுகவின் பொறுப்பாளர்கள் தமிழ்வாணன், கோவிந்தசாமி, ரகு, சிவப்பிரகாசம், முருகன் ஆகிய 5 பேர் அலுவலகத்தில் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டை உடைத்து வெளியே தூக்கி வீசி உள்ளனர். திமுகவினர் கல்வெட்டை உடைத்து தூக்கி வீசிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.



 

இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் திமுகவினர் செய்த செயலை கண்டித்து அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அதிமுகவினர் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது,  உடைத்த கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும் கல்வெட்டு உடைத்த திமுகவினரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுகவினர் கூட்டுறவு வேளாண்மை சங்க அலுவலகம் முன்பு 200 க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.



 

 

இப்போராட்டத்தில் மாவட்ட  செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுகவினரை எதிர்த்து அதிமுகவினர் 20 0க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



 

இந்த சம்பவம் குறித்து சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்தியன் கூறுகையில், அரசு சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் வைக்கப்பட்ட கல்வெட்டை திமுகவினர் அத்துமீறி, உள்ளே நுழைந்து அடித்து உடைத்து இருப்பது அராஜகமான செயல், உடனடியாக காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உடைத்து எடுக்கப்பட்ட கல்வெட்டை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 


மேலும் செய்திகள் படிங்க அன்று பாம்பே வரை ஏற்றுமதியான கருங்குழி வெற்றிலை..! காய்ந்து காணாமல் போன கதை என்ன ?



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற 


https://bit.ly/2TMX27X