காஞ்சிபுரம் மாவட்டம் தூலுக்கந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு, இவர் தனது பூர்வீக சொத்தை பதிவு செய்வதற்காக காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எண் 2 இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபொழுது, அவருடைய சொத்தின் மதிப்பு அரசு கூறியதை விட அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து சொத்தின் மதிப்பு அதிகப்படியாக மதிப்பீடு செய்துள்ள காரணத்தினால், அதனை மறு மதிப்பீடு செய்வதற்காக மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்யுமாறு சார் பதிவாளர் சீனிவாசனிடம் பாலு கேட்டுள்ளார். சொத்து மதிப்பீடு மறுபரிசீலனை செய்து அது குறையும் பட்சத்தில், சொத்தை பதிவு செய்யும் கட்டணம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சார்பதிவாளர் சீனிவாசன் சொத்து மதிப்பினை  மறுமதிப்பீடு செய்ய மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் என பாலுவிடம் சார் பதிவாளர் சீனிவாசன் கேட்டுள்ளார்.  பாலு லஞ்சம் தர மறுத்துள்ளார், இதனால் பாலுவின் சொத்து மதிப்பை மறுபரிசீலனை செய்ய மாவட்ட பதிவாளருக்கு பரிசீலனை செய்யாமல் அவருடைய கோப்புகளை கிடப்பில் போட்டு உள்ளார்.


இதனால் மன உளைச்சலில் இருந்த பாலு , இதுகுறித்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் சீனிவாசனை கையும் களவுமாக பிடிப்பதற்கு திட்டம் தீட்டினர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி பாலு, நேற்று சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை வழங்கியுள்ளார்.


அப்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பாலு வழங்கிய லஞ்சப் பணத்தை வாங்கிய சார்பதிவாளர் சீனிவாசனையும், லஞ்சப் பணத்தை வைத்திருந்த அலுவலக தினக்கூலியாக வேலை செய்யும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


மேலும் அவர்களிடமிருந்து  20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து போலீசார் கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்திய காரணத்தினால் தாலுகா அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதே நேரத்தில் சார்பதிவாளர் சென்னை, அண்ணாநகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராது ₹15,30,000 பணம் மற்றும் சொத்து ஆவண பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.


இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்கையில், இணை சார்பதிவாளர் சீனிவாசன் லஞ்சம் கேட்பதாக எங்களுக்கு புகார் மனு வந்திருந்தது. இணை சார்பதிவாளரை கையும் களவுமாக பொறிவைத்துப் பிடிப்பதற்கு திட்டம் தீட்டினோம், அதனடிப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அவரை கையும் களவுமாக பிடித்தோம். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீனுவாசன், பன்னீர் செல்வம் என்பவரை லஞ்சம் வாங்குவதற்காக தன் சொந்த பணத்தில் வேலைக்கு அமர்த்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. என தெரிவித்தனர்.


நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டால் மாற்றிக் கொள்வோம் என்பதற்காக சம்பளம் வைத்து லஞ்சம் வாங்கிய சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லஞ்சம் வாங்குவதும் குற்றம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம். லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண் 044 - 2723 7139 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும் படிங்க காஞ்சிபுரம் : முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டி படுகொலை : நடந்தது என்ன?