தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய கணக்கு தனிக்கையாளரான சிஏஜியின் தனிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக மின்சார துறையில் கடந்த அரசு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது உள்ளிட்டவை தொடர்பாக கூறப்பட்டிருந்தது. 


இந்நிலையில் அந்த அறிக்கையில் சென்னையிலுள்ள ஈஞ்சம்பாக்கம், சோளிங்கநல்லூர், உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் கரையோர ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு 798 கட்டிடங்கள் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது தெரியவந்தது. 




அப்போது இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “ஈஞ்சம்பாக்கம், சோளிங்கநல்லூர் மற்றும் உதாண்டி பகுதிகள் கரையோர ஒழுங்குமுறை விதிகளில் பகுதி IIல் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது பகுதி IIIல் இருந்து இப்பகுதிகள் பகுதி II-ற்கு 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதிகளில் 1991ஆம் ஆண்டிற்கு முன்பாக இருந்து நிலப் பகுதியில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது” எனக் கூறப்பட்டிருந்தது. 


CAG Report | தமிழ்நாடு மின்சாரத் துறையில் இழப்பு எத்தனை கோடி? சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?


இந்தச் சூழலில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில்,”ஈஞ்சம்பாக்கம், சோளிங்கநல்லூர் மற்றும் உதாண்டி பகுதிகள் இன்னும் கரையோர ஒழுங்குமுறை விதிகளின் பகுதி IIIல் தான் உள்ளன. இங்கு உரிய அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் வந்துள்ளன. மேலும் இப்பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது  சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. இந்தப் பகுதிகளை கரையோர ஒழுங்குமுறை பகுதி IIல் மாற்ற ஆலோசனை மட்டும் நடத்தப்பட்டது. ஆனால் அது தற்போது வரை மாற்றப்படவில்லை என்றும் அதை மாற்றுவது தொடர்பான வரைவு தான் பரிசீலக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது. 


கரையோர ஒழுங்குமுறை விதிகள் என்றால் என்ன?




சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 சட்டத்தின்கீழ் மத்திய சுற்றுச்சூழல் துறை கரையோர ஒழுங்குமுறை விதிகளை 1991ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த விதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தாலும் இதை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். இந்த விதிகளின்படி கரையோர பகுதிகள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் 2011ஆம் ஆண்டும் 2018ஆம் ஆண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 



  • பகுதி I- இப்பகுதிகளில் எந்தவிதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி கிடையாது. இது மிகவும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு ஏற்ற பகுதி. உதாரணமாக சதுப்பு நில காடுகள், பவல பாறைகள் ஆகியவை இப்பகுதியின் கீழ் வரும். 

  • பகுதி II- இப்பகுதிகளில் கரையோரம் உள்ள ஆபத்தான பகுதி தவிர மற்ற நிலப்பரப்பில் கட்டிடங்கள், வளர்ச்சி பணிகள் ஆகியவை மேற்கொள்ள அனுமதி உண்டு. 

  • பகுதி III- இப்பகுதியில் எந்தவித புதிய கட்டுமான பணிகளுக்கும் அனுமதி கிடையாது. குறிப்பாக கடல் அலை உயரமட்டத்திலிருந்து 200 மீட்டர் பரப்பரளவு வரை எந்தவித கட்டிடமும் கட்ட அனுமதி இல்லை. 

  • பகுதி IV- இது முற்றிலும் கடற்பகுதி சார்ந்தது. இந்த கடற்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் இங்கு கழிவுகளை கொட்டவோ அல்லது சுற்றுச்சூழுக்கு பாதிப்பு தரும் பிற பணிகளுக்கு அனுமதி இல்லை.


இவ்வாறு மேல கூறப்பட்டுள்ள இடங்களில் பகுதி III-ன் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: CAG Report | 2014 முதல் 2019 வரை, நிலக்கரி தரம் குறைவால் இத்தனை கோடி இழப்பு : சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?