சட்டப்பேரவையில், 2019ம் ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை அறிக்கையை தமிக்நாடு அரசு நேற்று தாக்கல் செய்தது. 2013 முதல் 2018 வரை தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் தமிழ்நாடு மின்சாரத் துறையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2018ம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தனது 60 சதவித செலவீனங்களை மின்சாரக் கொள்முதலுக்காக மட்டும் பயன்படுத்தியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2013-14ல் தனியார் துறையிடம் இருந்து 24,164.84 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ரூ.11,873.37 கோடிக்கு வாங்கிய நிலையில், 2017-18ல் 29,758.38 மில்லியன் யூனிட் மின்சாரத்தை 3,13,564.33 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது.
தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சார கொள்முதல் அதிகரிப்பதற்கு மூன்று அடிப்படைக் காரணங்களையும் சிஏஜி எடுத்துரைத்துள்ளது.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மரபு சார்ந்த எரிசக்தி ஆதாரங்களின் மூலம் மின்நிறுவு திறனை அதிகரிக்கவில்லை
- பகிர்மானக் கழகத்தின் நீர் மின் திட்டங்கள், அனல் மின் திட்டங்கள், எரிவாயு மின் திட்டங்களின் செயலற்ற தன்மை
- மத்திய அரசின் மின் திட்டங்களில் ஏற்பட்டுள்ள காலதாமதம்
தவறான நிர்வாகம் மற்றும் காலதாமதமாக எடுக்கப்பட்ட சில முடிவுகளால் 2013 முதல் 2018 இடையே தமிழ்நாடு மின்சாரத் துறையில் ரூ .5,115.59 கோடி வரை தேவையற்ற செலவீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நீண்ட கால மின்சார ஒப்பந்தம் செய்யப்பட்ட 8 தனியார் நிறுவனங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வழங்கவில்லை. இதற்கான நஷ்டஈடையும் தமிழ்நாடு மின்சாரத் துறை கேட்டுப்பெற முயற்சிக்கவில்லை. ஆனால், மூன்றாவது ஆண்டில் இருந்து அன்றைய சந்தை மதிப்பு யூனிட்டுக்குப் பதிலாக, ஒப்பந்தம் போடப்பட்டபோது நிர்ணையிக்கப்பட சந்தை மதிப்பின் அடிப்படையில் மின்சாரத்தை வாங்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.1,116.04 கோடியாகும்.
மத்திய அரசின் மின்உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதத்தால் தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு 2,381.54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மின்தட்டுப்பாடை ஈடுசெய்ய கூடுதலாக ரூ.2,099.48 கோடிக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது.
மிகக் குறைந்த மெரிட் ஆர்டர் டிஸ்பாட்ச் (எம்ஓடி) உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும், நாப்தா அடிப்படையிலான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு ரூ .3,493.74 கோடியைச் செலவிட வேண்டியிருந்தது.
மேலும், உரிய நேரத்தில் ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் செயல்முறையை பின்பற்றாத காரணத்தினால், தினசரி பற்றாக்குறையின் அடிப்படையில் மின்சாரத்தை வாங்கியது. இதன் விளைவாக, மின்சாரத் துறைக்கு கூடுதலாக ரூ.139.48 கோடி செலவாகியது. ஒப்பந்தத்தை உரிய நேரத்தில் புதுப்பித்திருந்தால் இத்தகைய செலவீனங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை தொடங்க உற்பத்தியாளர்களுக்கு அளித்த காலஅவகாசம் காரணமாக, மின் உற்பத்தி கழகம் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது. இதன் விளைவாக ரூ .605.48 கோடி அதிகமாக செலவிடப்பட்டதாக சிஏசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.