காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி - மாலதி தம்பதியினர் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் தங்கி வேலைசெய்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தைக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுள்ளனர். அதன்பிறகு நேற்றே தோல் தடுப்பூசி போட்டு உள்ளனர், தொடர்ச்சியாக தடுப்பூசி போடப்பட்ட மூன்று மணிநேரத்தில் குழந்தை மயங்கியுள்ளது.
இதனால் பதறிய பெற்றோர், குழந்தை உடல்நிலை குறித்து மருத்துவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர் . பிறந்த குழந்தைக்கு 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது உயிரிழந்த குழந்தை உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் உறவினர்கள் குழந்தையின் உயிர் இழப்புக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர், நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்தால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் பதில் கூற மறுத்துவிட்டனர் , உயிரிழந்த குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான உண்மை தெரியவரும் எனக் போலீசார் கூறியுள்ளனர்.