Diwali 2023: விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழ்நாடு முழுவதும் 2095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு நேரம் விதிமீறல்
தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்து. மேலும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.
மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு. வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்து இருந்தது.
581 பேர் மீது வழக்குப்பதிவு:
இந்த, விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 118வது சட்டப்பிரிவின் படி 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நேர கட்டுப்பாட்டை மீறியும், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசை பகுதிகள் போன்ற பட்டாசு தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக, காவல் நிலையத்திலும் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பட்டாசு வெடிப்பதில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தனிப்படை போலீசார், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அதேபோல், விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழ்நாடு முழுவதும் 2095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Tesla Model X Review: தீபாவளி டமாகா.. வியப்பில் ஆழ்த்தும் டெஸ்லா மாடல் எக்ஸ் கார்.. ஒரு பார்வை