பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமின்றி, திருமணம் ஆன பெண்களுக்காகவும் அழகிப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்திய பெண்கள் உலகளவில் இதில் கோலாச்சி வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களும் இதில் சமீபகாலமாக அசத்தி வருகின்றனர்.
மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் பட்டம் வென்ற சென்னை பெண்:
இந்த நிலையில், அமெரிக்காவில் வேர்ல்ட் யுனிவர்சல் ப்ரொடக்ஷன்ஸ் அமைப்பு சார்பில் மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் பட்டத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சென்னையைச் சேர்ந்த சரிகா என்ற இளம்பெண் பங்கேற்றார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாட்டு அழகிகளுடன் போட்டியிட்ட சரிகா அனைத்து சுற்றிலும் அசத்தினார். இதையடுத்து, மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் பட்டத்தையும் கைப்பற்றினார்.
மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் பட்டத்தை கைப்பற்றியுள்ள சரிகா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றவர். தொழில் முனைவோர், பேஷன் டிசைனிங் ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட சரிகாவின் தாயாரும் உலக அழகிப் பட்டம் பெற்றவர். சரிகாவின் தாய் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. இவர் மனநல மருத்துவர் ஆவார்.
தாயும் உலக அழகி:
சமீபகாலமாக திருமணமான பெண்களுக்காகவும் உலக அளவில் அழகிப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021ம் ஆண்டு நடந்த மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், இவர் 2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகிப்போட்டியிலும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். அந்த போட்டியில் மிஸஸ் இன்டர்னேஷனல் வேர்ல்ட் பீபுள் சாய்ஸ் வின்னர் என்ற பட்டத்தையும் வென்றார். மேலும், பல்வேறு அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
தற்போது மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் பட்டத்தை கைப்பற்றிய சரிகா சவுத்ரி இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அம்மா கடுமையாக முயற்சி செய்து அழகிப் போட்டிக்கு தயாரானார். அவரது உடல் உறுதியை விட மன உறுதி முக்கியமானாதாக இருந்தது. அதுவே தன்னையும் அழகிப் போட்டிக்கு தயார் செய்தது என்று கூறியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் சர்வதேச அளவில் உலக அழகி பட்டத்தை கைப்பற்றி தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மேலும் படிக்க: கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க சென்ற தொழிலாளிகள்; அடுத்த கனமே நேர்ந்த சோகம்