வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்செந்தூரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது துணைவி சௌமியா அன்புமணி ஆகியோர் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். முன்னதாக அவர்கள் துலாபாரத்தில் எடைக்கு எடை அரிசியை தானமாக கொடுத்தனர். அதில் 780 கிலோ அரிசி தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருச்செந்தூர் வள்ளி குகை பின்புறம் உள்ள பகுதியில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். 




தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு  PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது. மேலும் தவறான தகவல் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்செந்தூரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அடுத்த 18 மாதத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது அதில் நாங்கள் யார் என காண்பிக்க கூடிய காலம் வரும் என அவர் கூறினார் . 




மேலும்  கடந்த டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களில் பெய்த பெருவெள்ளத்தை சமாளிக்க மத்திய அரசு போதிய நிதி வழங்காதது குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு அவர், மத்திய அரசு இதுபோன்ற காலங்களில் கண்டிப்பாக உதவி செய்யத்தான் வேண்டும் ஆனால் மாநில அரசு கடந்த பட்ஜெட் நிதியாண்டில் 18 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் ஒரு 2000 கோடியை பேரிடர் காலத்தில் பயன்படுத்த வேண்டிய தொகைக்காக ஒதுக்கினால் தமிழக அரசே இதனை சமாளிக்கலாம் எனவும் தெரிவித்தார். 




மேலும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது எனவும் ஆனால் தேர்தல் ஆணையம் உரிய கால அவகாசம் வழங்கி தேர்தல் தேதி உள்ளிட்டவைகளை அறிவிக்க வேண்டும் எனவும், அதில் முறையாக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார்.