ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றதாக் போலி ஆவணம் தயாரித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு மோசடி செய்து வந்த சென்னையைச் சேர்ந்த சந்திரபோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்திரபோஸிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள், பிரின்டிங் மெஷின், போலி அரசு முத்திரைகள் மற்றும் விலை உயர்ந்த கார் மற்றும் ரூ.57 லட்ச ரூபாய் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை சுமார் 3,000 வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 8 கிளைகளில் மொத்தமாக மோசடி செய்த தொகை எவ்வளவு என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர், லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி (Rural and Agriculture Farmers Co operative Bank (RAFC Bank)) என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். அவர் இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலிச் சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியைத் தொடங்கியுள்ளார். இந்த வங்கி குறித்து ரிசர்வ் வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த RAFC வங்கி சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தில் மேலும் 8 இடங்களில் கிளை தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உட்பட 8 இடங்களில் இயங்கியுள்ளது. இந்த வங்கிகளில் ஆயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், இப்படி ஒரு பெயரில் ரிசர்வ் வங்கியின் கீழ் எந்த வங்கியும் இல்லை புகார் தெரிவித்தார். அதன்படி, கடந்த 5-ஆம் தேதி இந்த வங்கியின் தலைவர் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியான பதிவுச் சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் மற்றும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக் கணக்கில் இருந்த ரூ.56 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டது.
விசாரணையில், வங்கியின் உயரதிகாரிகளை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நியமித்ததும், அவர்களின் கீழ் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணம் பெற்றுக்கொண்டு பணியில் அமர்த்தி போலி வங்கிகளை செயல்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், வங்கிக் கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியதும், போலியான டெபிட் கார்டுகள் தயாரித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதேபோல், பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்புத் தொகை ஆகியவற்றைப் பெற்றும், அதிக வட்டி தருவதாகக் கூறி நிரந்தர வைப்புத் தொகைகளைப் பெற்றும் கோடிக் கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
6.5% வட்டியுடன் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து பின் அடாவடியாக அவற்றை வசூலித்தும் பல்வேறு வழிகளில் விவசாயிகளிடம் மோசடி செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற போலி வங்கி கணக்குகள் அனைத்தும் பல்வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது. சுமார் 3000 வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை அம்பத்தூர் கிளையில் மட்டும் ரூபாய் 2 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஏழு கிளைகளில் எவ்வளவு மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் எம்.பி.ஏ படித்து அங்கேயே வங்கி துறையில் பணிபுரிந்து வந்த திருமுல்லைவாயிலைச் சேர்ந்த சந்திரபோஸ், சென்னை வந்து பொதுமக்களை ஏமாற்ற போலி வங்கி தொடங்கியதும் அதற்காக வங்கி பணப்பரிவர்த்தனைக்கான மென்பொருள், பில்லிங் மெஷின், பாஸ்புக் மெஷின் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்கி அதன் மூலம் வங்கி செயல்பாடுகளை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது
இதுபற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், போலியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் 3,000 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரியின் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில்தான் இந்த மோசடி தெரியவந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்படலாம். அதில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.